வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...

புதுடில்லி: 'உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்,'' என வங்கதேசத்திற்கு, ஐ.சி.சி., கெடு விதித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடியாக, 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுக்கிறது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பலமுறை வேண்டுகோள் விடுத்தது.
பி.சி.பி.,யிடம், ஐ.சி.சி., யின் இரு நபர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 'இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தற்போதுள்ள 'சி' பிரிவுக்குப் பதில், இலங்கை அணி இடம் பெற்றுள்ள 'பி' பிரிவுக்கு தங்கள் அணியை மாற்ற வேண்டும்,' என பி.சி.பி., தெரிவித்தது. இதனால், தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடலாம் என திட்டமிட்டது.
ஆனால், 'போட்டி அட்டவணை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. தவிர, வங்கதேச அணி, இந்தியாவில் பங்கேற்பது குறித்து எவ்வித மிரட்டல் அல்லது நேரடி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. இதனால் இந்தியாவில் விளையாடுவது குறித்து நாளைக்குள் (ஜன. 21) முடிவு எடுக்க வேண்டும்,' என ஐ.சி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வாய்ப்பு
தற்போது வங்கதேச அணி 'சி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளத்துடன் இடம் பெற்றுள்ளது. வங்கதேசம் இந்தியா வரமறுக்கும் பட்சத்தில், வேறு அணியை களமிறக்க ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி, 'சி' பிரிவில் இடம் பெறலாம்.

Advertisement