புழுதியால் பாதிக்கும் மாணவர்கள் 

உடுமலை: இணைப்பு ரோட்டில் இருந்து பறக்கும் புழுதியால் பள்ளி மாணவர்கள் பாதிப்பது குறித்து மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரடி ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் அந்தியூர் பகுதியில் நிறைவு பெறாமல் உள்ளது.

இதனால், அவ்வழியாக வரும் வாகனங்கள், கொங்கல்நகரம் - அந்தியூர் கிராம இணைப்பு ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த ரோட்டையொட்டி, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது.

அதிக வாகன போக்குவரத்து காரணமாக இணைப்பு ரோடு பழுதடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மண் பாதையாக மாறி விட்டது.

அவ்வழியாக கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, இணைப்பு ரோட்டில் இருந்து எழும் புழுதி பள்ளிக்குள் பறந்து சென்று மாணவ, மாணவியர் பாதித்து வந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகார் அடிப்படையில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் நேரடி ஆய்வு செய்தனர்.

பள்ளி வளாகம் மற்றும் இணைப்பு ரோட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில், 'நான்கு வழிச்சாலை வாகனங்கள், இணைப்பு ரோடு வழியாக திருப்பி விடப்படுவதால், ரோடு அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு தொடர் போக்குவரத்து உள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., இணைப்பு ரோட்டை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மாற்றுப்பாதையாக பயன்படுத்துவதால், விரைவில், இணைப்பு ரோடு மேம்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் உறுதியளித்துள்ளனர்.

Advertisement