கிரீன்லாந்தை கையகப்படுத்த சட்ட மசோதா: அமெரிக்க பார்லியில் அறிமுகம்

18


வாஷிங்டன்: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் குடியரசு கட்சியின் உறுப்பினர் ராண்டி பைன் தாக்கல் செய்துள்ளார்.


ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. குறைந்த மக்கள் தொகை, அதிக நிலப்பரப்பு கொண்ட கிரீன்லாந்தில் எண்ணெய் மற்றும் அரிய கனிமவளங்கள் இருக்கின்றன. புவி வெப்பமயமாதலால், அங்கு புதிய கப்பல் வழித்தடங்கள் உருவாகின்றன.

இந்த காரணங்களாலும், ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே அமைந்துள்ளதாலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார்.
''எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பினார்.


கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் மிரட்டுவது, சர்வதேச அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்தை, தன் வசம் வைத்திருக்கும் டென்மார்க், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் உறுப்பினரும் கூட. இருந்தாலும், அதைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

அவரது அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.இத்தகைய சூழ்நிலையில், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் குடியரசு கட்சி உறுப்பினர் ராண்டி பைன் தாக்கல் செய்துள்ளார்.


கிரீன்லாந்தை கையகப்படுத்தவும், இறுதியில் அதை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சட்டபூர்வமான அதிகாரத்தை அதிபர் டிரம்புக்கு இந்த மசோதா வழங்கும். அதிபரை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அவரது ஆதரவு பார்லி உறுப்பினர் இத்தகைய மசோதாவை தயார் செய்துள்ளதாக, அமெரிக்காவில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

Advertisement