பாக்., மீது தரைப்படை தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்; ராணுவ தளபதி தகவல்

9


புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்துார் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டால், தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம்' என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானிலும், அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்தது. ஏவுகணைகள் சரமாரியாக தாக்கி, பயங்கரவாதிகளை அழித்தன. தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம், தனது டிஜிஎம்ஓ மூலம் போர் நிறுத்தம் செய்யக்கோரியதை ஏற்று போர் நிறுத்தப்பட்டது.

தாக்குதல் நடந்த 88 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் திவேதி கூறியதாவது:

ஆபரேஷன் சிந்துார் தாக்குதலின்போது, பாகிஸ்தான் ஏதேனும் தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்காக தயாராக இருந்தோம். தரைப்படை தாக்குதலை தொடங்கும் அளவுக்கு இந்திய ராணுவம், முழு அளவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

எங்களுக்கு கிடைத்த தகவல்படி, பாகிஸ்தானில் இப்போதும் 8 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன. சர்வதேச எல்லையில் 2 முகாம்களும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு மறுபுறத்தில் 6 முகாம்களும் இருக்கின்றன.

அவற்றின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை கட்டாயம் எடுப்போம். ஆபரேஷன் சிந்துார் தொடங்கிய நாட்கள் முதலே, எங்கள் கண்காணிப்பு முழுமையானதாக இருக்கிறது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு உபேந்திர திவேதி தெரிவித்தார்.

Advertisement