அரையிறுதியில் விதர்பா, பஞ்சாப் * விஜய் ஹசாரே டிராபி தொடரில்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி தொடரின் அரையிறுதிக்கு விதர்பா, பஞ்சாப் அணிகள் முன்னேறின.
இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. விதர்பா-டில்லி, பஞ்சாப்-மத்திய பிரதேச அணிகள் மோதிய காலிறுதி போட்டிகள் நேற்று பெங்களூருவில் நடந்தன. 'டாஸ்' வென்ற மத்திய பிரதேசம் பீல்டிங் செய்தது.
பஞ்சாப் அணிக்கு ஹர்னூர் சிங் (51), கேப்டன் பிரப்சிம்ரன் சிங் (88) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அன்மோல்பிரீத் சிங் (70), நேஹல் வதேரா (56) தங்கள் பங்கிற்கு அரைசதம் அடித்து கைகொடுத்தனர். நமன் திர் 23 ரன் எடுத்தார். பஞ்சாப் அணி 50 ஓவரில் 345/6 ரன் குவித்தது. ராமன்தீப் சிங் (24) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு ரஜத் படிதர் (38), திரிபுரேஷ் (31), சுபம் சர்மா (24) தவிர மற்றவர்கள் ஏமாற்றினர். 31.2 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. 183 ரன்னில் வென்ற பஞ்சாப், அரையிறுதிக்கு முன்னேறியது.
டில்லி ஏமாற்றம்
மற்றொரு காலிறுதியில் முதலில் களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா (62), அமன் (2) ஜோடி துவக்கம் தந்தது. துருவ் ஷோரே (49) சற்று உதவ, யாஷ் ரத்தோட் 86 ரன் எடுத்தார். விதர்பா அணி 50 ஓவரில் 300/9 ரன் எடுத்தது.
டில்லி அணிக்கு வைபவ் (28), பிரியான்ஷ் (28) ஜோடி துவக்கம் தந்தது. 'மிடில் ஆர்டரில்' நிதிஷ் (0), தேஜஸ்வி (15) கைவிட்டனர். அனுஜ் ராவத் மட்டும் அதிகபட்சம் 66 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். டில்லி அணி 45.1 ஓவரில் 224 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா அணி 76 ரன் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் கர்நாடகா-விதர்பா (ஜன. 15), சவுராஷ்டிரா-பஞ்சாப் (ஜன. 16) அணிகள் மோத உள்ளன.

Advertisement