எனக்கு 45...உனக்கு 38
ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் நடந்த ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் அனுபவ வீனஸ் வில்லியம்ஸ், 45, (உலக ரேங்கிங்கில் 576வது இடம்), ஜெர்மனியின் டாட்ஜானா மரியாவிடம், 38, (42வது இடம்) 4-6, 3-6 என தோல்வி அடைந்தார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு வரலாற்றில் இரு மூத்த வீராங்கனைகள் (இருவர் வயதும் சேர்த்தால் 83 ஆண்டு) மோதிய போட்டி ஆனது. இதனை காண தனது மகள்கள் சார்லோட்டி, 12, சிசிலியாவை, 4, அழைத்து வந்திருந்த மரியா கூறுகையில்,''எனது மகள்கள் வீனஸ் வில்லியம்சின் ரசிகைகள். இருவரும் ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தனர்,''என்றார்.
8வது அதிசயம் அலிசா
சிட்னி: ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் அலிசா ஹீலி, 35, ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். கீப்பர்-பேட்டரான இவர், 10 டெஸ்ட் (489 ரன்), 123 ஒருநாள் போட்டி (3563 ரன்), 162 'டி-20' போட்டியில் (3054 ரன்) பங்கேற்றுள்ளார். ஐ.சி.சி.,யின் 8 உலக கோப்பையை (6 'டி-20', 2 50 ஓவர்) முத்தமிட்டவர். சொந்த மண்ணில் வரும் மார்ச்சில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியுடன், கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆஸ்திரேலிய 'வேகப்புயல்' ஸ்டார்க்கின் மனைவியான இவர், வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் (2026, பிரிட்டன்) பங்கேற்க மாட்டார்.
நாங்க தான் 'டாப்'
செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரியனில் நடந்த எஸ்.ஏ., 20 லீக் போட்டியில் பிரிட்டோரிய கேப்பிடல்ஸ் அணி (20 ஓவர், 185/6), எம்.ஐ., கேப்டவுன் அணியை (20 ஓவர், 132/7) 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புள்ளிப்பட்டியலில் பிரிட்டோரிய அணி (20 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* குஜராத்தில் (வித்யாநகர்) விஜய் மெர்ச்சன்ட் டிராபி காலிறுதி நடக்கிறது. முதல் இன்னிங்சில் மும்பை 633/8, உ.பி., அணி 135/10 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் மும்பை அணி, இரண்டாவது இன்னிங்சில் 183/4 ரன் எடுத்து, 681 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
* புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன். வரும் ஜன. 18ல் மெல்போர்னில் துவங்க உள்ளது. இதற்கான ஆண்கள், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின.
* செஸ் வரலாற்றில் ஐந்து முறை உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 35. பல்வேறு பிரிவுகளில் நடந்த தொடரில் மொத்தம் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வரும் மே 25-ஜூன் 5 வரை சொந்தமண்ணில் நடக்கவுள்ள நார்வே செஸ் தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
* பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர், நெதர்லாந்து, பெல்ஜியத்தில், வரும் ஆக. 15-30ல் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஐதராபாத்தில் வரும் மார்ச் 8-14ல் நடக்கும். இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து உட்பட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. முடிவில், 'டாப்-3' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.