பாட்மின்டன்: லக்சயா சென் வெற்றி

புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் லக்சயா சென்னிடம் வீழ்ந்தார் ஆயுஷ் ஷெட்டி.
டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதினர். முதல் செட்டை லக்சயா 21-12 என வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 21-15 என கைப்பற்றினார். 36 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் லக்சயா சென், 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகிட்டா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 21-11 என கைப்பற்றியது. 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற கணக்கில் வென்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 11-21, 22-20, 22-24 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஹியு யன், லுய் ஜோடியிடம் போராடி தோற்றது.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் (தமிழகம்), அர்ஜுன் ஜோடி, 21-15, 21-18 என மலேசியாவின் ஈவ் சின் ஆங், இ தியோ ஏ ஜோடியை சாய்த்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் ராவத், மனீஷா ஜோடி, 9-21, 10-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஹிரோகி, மட்சுயமா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement