இந்தியாவுக்கு கரும்பாக இனிக்குமா... * எளிதாக தொடரை வெல்லுமா
ராஜ்கோட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராத் கோலி மீண்டும் விளாசினால், இந்திய அணி தொடரை 2-0 என சுலபமாக கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
கோலி பலம்
இந்திய அணியின் 'பேட்டிங்' வலுவாக உள்ளது. துவக்கத்தில் 'சீனியர்' ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை தருகின்றனர். 'மிடில் ஆர்டரில்' அனுபவ கோலி அசத்துவது பலம். கடந்த போட்டியில் 93 ரன் விளாசிய இவர், ஒருநாள் அரங்கில் 54வது சதம் அடிக்கும் வாய்ப்பை நுாலிழையில் தவறவிட்டார். இன்றும் ரன் மழை பொழியலாம். ஷ்ரேயஸ் ஐயர் நல்ல 'பார்மில்' உள்ளார். ஜடேஜா சுதாரிக்க வேண்டும். முதல் போட்டியின் கடைசி கட்டத்தில் இந்தியா தடுமாறிய போது, ஹர்ஷித் ராணா, ராகுல் கைகொடுத்தனர். தோனி போல 'பினிஷிங்' பணியை ராகுல் கச்சிதமாக செய்தார். இவர்களது அதிரடி இன்றும் தொடர்ந்தால், இனிக்கும் பொங்கல் கரும்பு போல, இந்தியா வெற்றியை ருசிக்கலாம்.
அர்ஷ்தீப் வாய்ப்பு
பந்துவீச்சில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கடந்த முறை ரன்னை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறலாம். விலா எலும்பு பகுதி காயத்தால் விலகிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் இடம் பிடிக்கலாம். 'ஸ்பின்னர்' ஆயுஷ் படோனியும் அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சிராஜ், ஹர்ஷித், ஜடேஜா, குல்தீப் மிரட்டலாம்.
அனுபவம் இல்லை
நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் 300 ரன் குவித்தது. கான்வே, நிக்கோல்ஸ், டேரில் மிட்சல் அரைசதம் கடந்தது பலம். கிளன் பிலிப்ஸ், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் ஏமாற்றுகின்றனர். கைல் ஜேமிசன் தவிர மற்ற பவுலர்களுக்கு அனுபவம் இல்லாதது பலவீனம். கிறிஸ்டியன் கிளார்க், தமிழக வம்சாவளி 'ஸ்பின்னர்' ஆதித்யா அசோக் கட்டுக்கோப்பாக பந்துவீச முயற்சிக்கலாம்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 121 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 63, நியூசிலாந்து 50ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 போட்டிக்கு முடிவு இல்லை.
* ராஜ்கோட், நிரஞ்சன் ஷா மைதானத்தில் இந்தியா, நியூசிலாந்து முதல் முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. இங்கு ஏற்கனவே பங்கேற்ற நான்கு ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு (2020) எதிராக மட்டும் வென்றது. இங்கிலாந்து (2013), தென் ஆப்ரிக்கா (2015), ஆஸ்திரேலியாவிடம் (2023) தோற்றது.
மழை வருமா
ராஜ்கோட் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. போகப்போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.
* இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
''ஒருநாள் போட்டிக்கான எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் ரோகித் சர்மா, கோலி முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்களது அனுபவங்களை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான (50 ஓவர்) திட்டம் பற்றி பயிற்சியாளர் காம்பிர் உடன் விவாதிக்கின்றனர். இந்திய அணியின் வெற்றியை இலக்காக கொண்டுள்ளனர்.
-சிதான்ஷு கோடக்
இந்திய பேட்டிங் பயிற்சியாளர்