தசரா கலைவிழாவில் ஆபாச நடனத்தை தடுக்க தயங்கும் அதிகாரிகள்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

9

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா கலைவிழாவில் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை கோரிய வழக்கில்,'நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களுக்கு கலெக்டர், எஸ்.பி.,கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள். முந்தைய உத்தரவுகளை செயல்படுத்த அதிகாரிகள் தயங்குவதாக கருதுகிறோம். இது பாராட்டத்தக்கதல்ல,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை பதிவு செய்தது.


திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2025 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா நடைபெறும். பக்தர்கள் கையில் காப்பு கட்டி 48 நாட்கள் விரதம் இருப்பர்.



பக்தர்கள் குழுவாக பாரம்பரிய நடனங்களுக்கு ஆடிப்பாடி ஊர்கள்தோறும் காணிக்கை வசூல் செய்து கோயிலில் அப்பணத்தை ஒப்படைப்பர்.


சில ஆண்டுகளாக அதிக பணம் வசூல் செய்யும் நோக்கில் சினிமா மற்றும் 'டிவி' நடிகைகளை கொண்டு சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களுக்கு நடனம் ஆட வைக்கின்றனர். இதற்கு 2017 ல் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை மீறி தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடுவது தொடர்ந்தது.


2022 ல் உயர்நீதிமன்றம்,'டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டுதல்கள் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் பின்பற்றப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். ஆபாசமான மற்றும் அநாகரிகமான நடன நிகழ்ச்சிகள் நடந்தால் தடை செய்ய வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. 2023 ல் உயர்நீதிமன்றம் ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி தொடர்பான வழக்கில் சில கட்டுப்பாடுகள் விதித்தது.


ஆனால் 2023 மற்றும் 2024 தசரா கலை விழாவில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல், டி.ஜி.பி.,2023 ல் பிறப்பித்த வழிகாட்டுதல் சுற்றறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழாவின் போது செயல்படுத்த உத்தரவிட வேண்டும். 2025 (செப்.,- அக்.3 ) தசரா கலை நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற, நடனமாட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


செப்.24 ல் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:




கலை நிகழ்ச்சியில் பங்கேற்போர் மது அருந்தக்கூடாது. நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். கண்காணிப்புக்குழுவை அரசு தரப்பில் அமைக்க வேண்டும். குலசேகரபட்டினம் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், கோயில் செயல் அலுவலர் சார்பில் தலா ஒரு பிரதிநிதி, உள்ளூரை சேர்ந்த 2 பேர் குழுவில் இடம் பெற வேண்டும். அவர்கள் கலை விழாவை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


திருவிழாவின் கண்ணியம், ஆன்மிக உணர்விற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடனம் அல்லது கலாசார நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை என கண்காணிப்புக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.


மனுதாரர் தரப்பு:' தசரா விழாவிற்கு பொருத்தமற்ற நடன நிகழ்ச்சிகளை தடுக்க கோயில் அலுவலர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை,' எனக்கூறி வாதத்திற்கு ஆதாரமாக, நடன நிகழ்ச்சியின் சில காணொலி பதிவுகளை சமர்ப்பித்தது.



மீண்டும் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆபாச மற்றும் அருவருப்பான நடனத்தை தடுக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே இந்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


அறிக்கையில் திருப்தி இல்லை




மனுதாரர் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் அதுபோன்ற நடனம் இடம்பெற்றதை கோயில் செயல் அலுவலர் மறுக்கவில்லை. மாறாக ஆட்சேபனைக்குரிய நடனம் கோயில் வளாகத்திற்குள் நிகழவில்லை என்று மட்டுமே கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. இது கண்காணிப்புக் குழுவின் அறிக்கைக்கு முரணாக உள்ளது. நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களுக்கு கலெக்டர், எஸ்.பி.,கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள்.


முந்தைய உத்தரவுகளை செயல்படுத்த தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மனுதாரர் சமர்ப்பித்த 'பென்-டிரைவ்' மற்றும் போட்டோக்களை பார்க்கையில், ​​இந்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தயங்குவதாக கருதுகிறோம்.



இந்நடத்தை பாராட்டத்தக்கதல்ல. மனுதாரர் விரும்பினால், தீர்வு காண தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement