'பிரிக்ஸ்' பொறுப்பை ஏற்றது இந்தியா: புது இணையதளம் இலச்சினை வெளியீடு

1

புதுடில்லி: 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நம் நாடு ஏற்றுள்ள நிலையில், அதற்கான பிரத்யேக இணையதளம், 'லோகோ' எனப்படும், இலச்சினை மற்றும் மையப் பொருளை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, 'பிரிக்ஸ்' எனப்படுகிறது.

இதில், 2024ல், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இந்தோனேஷியா இணைந்தது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்த நிலையில், இந்தாண்டுக்கான தலைமைப் பொறுப்பை நம் நாடு ஏற்றுள்ளது.

இந்தாண்டு இறுதியில், இந்த கூட்டமைப்பின், 18வது உச்சி மாநாடு நம் நாட்டில் நடக்கிறது.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று நடந்த விழாவில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய இணையதளம், லோகோ, மையப் பொருள் ஆகியவற்றை பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான ஜெய்சங்கர் வெளியிட்டார்.

தாமரை வடிவிலான லோகோவில், கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகளில் உள்ள நிறங்கள் இடம் பெற்றுள்ளன.

நடுவில், இந்தியர்கள் பாரம்பரிய முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் வகையில், லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நம் நாட்டின் தலைமையின் கீழ் நடக்கும், 'பிரிக்ஸ்' கூட்டங்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை புதிய இணையதளம் வழங்கும்.

லோகோவில், அனைத்து உறுப்பு நாடுகளின் வண்ணங்களும் இடம் பெற்றுள்ளன. இது, கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒற்றுமை மற்றும் சமமான பிரதிநிதித்துவத்தை அடையாளப்படுத்துகிறது.

நம் தலைமைப் பொறுப்பில், மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதில் இந்த கொள்கைகளே கூட்டமைப்பின் முன்னுரிமைகளாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement