வங்கதேசத்தில் தொடரும் அதிர்ச்சி; 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொலை

9

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.



அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அடங்கிய சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்ட பின், ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுநரான சமீர் தாஸ்,28, என்ற ஹிந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பகுதியினர் ஹிந்துக்கள்.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்; வங்கதேசம் முழுதும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரையில் 7 மாதத்தில் மட்டும் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 45 மாவட்டங்களில் இந்த வன்முறை பரவியுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அசம்பாவீதங்கள், 1946ம் ஆண் தொடங்கி, 1950, 1964,1971 என தற்போது நீடிக்கிறது. 1946ல் 30 சதவீதமாக இருந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகை, 2020ல் 9 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதால், குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உருவாகிறது. இதுவே சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்செயலான குற்றங்கள் அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒடுக்குவதற்கான வன்முறை, என்று மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Advertisement