புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் மேம்பாலம்...  அமைக்கப்படுமா? நான்கு வழி சாலையை கடப்பதில் அபாயம்

தியாகதுருகம், : கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் நான்கு வழி சாலையை கடந்து செல்வதில் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதால், இங்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் வீரசோழபுரம் கிராமத்தில் சேலம் - சென்னை நான்கு வழி சாலையை ஒட்டி கட்டப்பட்டுள்ளது.

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 2019ம் ஆண்டு கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இடம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கள்ளக்குறிச்சியை ஒட்டி கலெக்டர் அலுவ லகம் கட்ட போதிய பரப்பில் அரசு நிலம் இல்லாததால் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டு இதே இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட, அரசு அனுமதி பெற்றது. அதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு செப்., 16ம் தேதி மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தம் 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களை கொண்டதாக அரசின் அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகளை விரைந்து முடிக்கப்பட்ட நிலையில் கடந்த டிச., 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அரசின் அனைத்து துறைகளின் மாவட்ட அலுவலகம் இக்கட்டடத்தில் அமைய உள்ளது. அலுவலகத்திற்குள் கோப்புகள் வைக்கும் ரேக்குகள் உள்ளிட்ட ஒருசில உட்கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவு பெற உள்ளது. இதனால் விரைவில் கலெக்டர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

நான்குவழி சாலையை ஒட்டி கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளதால் அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்வார்கள்.

சாலையின் இருபுறமும் பாரிக்கார்டுகளை வைத்து வாகனங்கள் வேகம் குறைவாக செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய் உள்ளனர். ஆனாலும் நான்கு வழி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

சேலம் - உளுந்துார் பேட்டை இடையே ரூ.350 கோடி மதிப்பில் விபத்து அதிகம் நடக்கும் 14 இடங்களை கண்டறிந்து கடந்த 2 ஆண்டுகளாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி பணிகள் துவக்கப்பட்டது.

அப்போதே கலெக்டர் அலுவலகம் எதிரில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு சென்று அதற்கான நிதியைப் பெற்று மேம்பாலம் கட்டியிருந்தால் இந்நேரம் பணிகள் முழுமை அடைந்திருக்கும்.

இன்னும் சில வாரங் களில் கலெக்டர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் அபா யகரமான நான்கு வழி சாலையை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

கலெக்டர் அலுவலகம் எதிரில் மேம்பாலம்கட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்திருந்தார்.

இனியும் தாமதப்படு த்தாமல் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் நான்கு வழி சா லையை பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகை யில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement