என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்!

பிரபல நடிகையாக இருந்து, தற்போது ஆன்மிக பாதையில் பயணிக்கும், 45 வயதாகும் மும்தாஜ்: நான், 16 வயதில் நடிக்க வந்து விட்டேன். அப்போது, தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு என நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒப்பனை போட்டு நடிக்கும்போது, அது ஒரு கதாபாத்திரம். அதில் நடிப்பது என் வேலை என, பல ஆண்டுகள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான் சார்ந்த முஸ்லிம் மதத்தில், சினிமாவில் நடிப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால், உடனே நடிப்பை விட்டு விலகும் முடிவை மனம் ஏற்றுக் கொள்ள வில்லை. எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது.

அப்போது தான், இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்; குறிப்பிட்ட ஆடைகள் அணிய மாட்டேன் என்று சின்ன சின்னதாக என்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன்.

நாம் ஒருவர் பேச்சை கேட்கிறோம் என்றால், பாதி கேட்பேன், பாதி கேட்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாதே... மதத்தை பின்பற்றும் விஷயத்திலும் பாதி இப்படி, பாதி அப்படி என இருக்க முடியாதில்லையா... ஒரு கட்டத்தில், சினிமாவே வேண்டாம் என்று முழுமையாக அதிலிருந்து ஒதுங்கினேன்.

எப்போது மனம் மாறி, குர்ஆன் படிக்க ஆரம்பித்தேனோ, அப்போது முதல் என் வாழ்க்கையே மாற ஆரம்பித்தது.

'விளம்பரத்திற்காக இப்படி செய்கிறேன்' என்று பலரும் கூறினர். இப்படி செய்வதால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கப் போகிறதா.

அப்படியே கிடைத்தாலும், நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நான், அதை வைத்து என்ன செய்ய போகிறேன்?

தற்போது, எந்தவித அலங்காரமும் செய்து கொள்வதில்லை. மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும், மிகவும் நிறைவாக உணர்கிறேன்.

மற்றவர்கள் என்ன செய்தாலும், அதுகுறித்து விமர்சனம் செய்வதற்கு என்றே சிலர் இருப்பர். அவர்களை, பாவம் என்று புறக்கணித்து விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.

மனதளவில் மிகவும் பக்குவமாகி இருக்கிறேன். எதற்கு பதற்றப்பட வேண்டும், எதற்கு கவலைப்பட வேண்டும், எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற தெளிவு இப்போது வந்திருக்கிறது.

நான் மற்றவர்களுக்காக வாழவில்லை. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என்னை குறித்து பேசும் யாரும் எனக்கு சாப்பாடு போடவில்லை. வாழ்க்கையின் பொன்னான நிமிடங்களை என்னை குறித்து பேசி வீணாக்குகின்றனரே என்று தான் தோன்றும்.

என்னை நேசிக்கும் மக்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை... என் பழைய புகைப்படங்களையும், காணொளிகளையும் சமூக வலைதளங்களில் பகிராதீர்கள். என் மனமாற்றத்திற்கு மதிப்பு கொடுங்கள்; என் வயது, உடை, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

Advertisement