மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது: குஜராத் ஐகோர்ட் குடும்பநல வழக்கில் கோர்ட் கருத்து

8

ஆமதாபாத்: 'திருமணமான தம்பதிக்கு இடையிலான பாலியல் உறவு, பரஸ்பர சம்மதத்துடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும்' என, தெரிவித்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் முன்ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை அந்த பெண் அனுபவித்தார். இது, குறித்து கடந்தாண்டு அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.

அதில், 'என் கணவர் மற்றும் குடும்பத்தார், வரதட்சணை கேட்டு துன்புறுத்துகின்றனர். என் கணவர், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள வற்புறுத்துகிறார்.

'இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு குஜராத் விசாரணை நீதிமன்றத்தில் கடந்தாண்டு நடந்தது. இந்த வழக்கில், ஜாமின் வழங்கக் கோரி கணவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து முன்ஜாமின் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யேஷ் ஏ ஜோஷி பிறப்பித்த உத்தரவு :

திருமணம் செய்து கொண்டால், மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு கொள்ளலாம் என்ற நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

ஆனால், நவீன சட்டக் கட்டமைப்புகள் ஒரு திருமண உறவுக்குள்ளும், தனி நபரின் உடல் சுதந்திரம் உண்டு என்பதை அங்கீகரிக்கின்றன.

தம்பதிக்கு இடையிலான நெருக்கம் மற்றும் பாலியல் உறவு இயல்பானதுதான். அது, பரஸ்பர சம்மதத்துடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும்.

மனைவியின் விருப்பத்துக்கு மாறாக கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபடுவது, பெரும் உடல் வலியை ஏற்படுத்துவதுடன், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அதிர்ச்சியை தருகிறது.

மனுதாரரின் முதல் மனைவியும், இதே போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்கனவே முன்வைத்துள்ளதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, மனுதாரர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவர் மேற்கொண்ட குற்றங்கள் கடுமையானது என்பதால், கைது செய்து விசாரிக்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement