சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கத்தை தொடர்ந்து நெய் விற்பனையிலும் முறைகேடு விசாரணைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

3

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெய் விற்பனையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை வாசலில் உள்ள துவாரபாலகர் சிலைகளின் பராமரிப்பு பணிகள் போது, நான்கு கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனையில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது.

ஆய்வு



சபரிமலை அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய், கோவில் வளாகத்தில் உள்ள கவுன்டர்களில் 'அடிய சிஷ்டம்' என்ற பெயரில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தாண்டு நவ., 17 - டிச., 26 வரையிலான காலக்கட்டத்தில், ஒப்பந்ததாரர் தலா 100 மி.லி., உடைய 3,52,050 பாக்கெட்டுகளை கோவில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார். இதில், 89,300 பாக்கெட்டுகள் கோவிலில் உள்ள விற்பனை மையத்தில் விற்கப்பட்டது.

வழங்கப்பட்டதில், 143 பாக்கெட்டுகள் சேதமடைந்ததாக கணக்கு காட்டப்பட்டது; 28 பாக்கெட்டுகள் கையிருப்பு இருந்ததாக கூறப்பட்டது. எனினும், சேதமடைந்த மற்றும் விற்பனை மையத்தில் இருந்த பாக்கெட்டுகள் போக, மீதமுள்ள 89,129 பாக்கெட்டுகளுக்கான விற்பனை தொகையை கோவில் நிர்வாகத்தில் செலுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், விற்பனை மைய பொறுப்பில் இருந்த ஊழியர்கள் 75,450 பாக்கெட்டுகளுக்கான பணத்தை மட்டுமே செலுத்தியுள்ளனர்.

மீதமுள்ள 13,679 பாக்கெட்டுகளுக்கான 13 லட்சத்து, 67,900 ரூபாய் கணக்கில் வராதது அம்பலமானது. கூடுதலாக, 2026, டிச., 27 - , ஜன. 2 வரையிலான காலக்கட்டத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22,655 பாக்கெட்டுகள் கணக்கில் குறைந்ததும் ஆய்வில் தெரியவந்தது.



அதிர்ச்சி



இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நெய் விற்பனையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு, இரண்டு மாதங்களில் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை கொண்ட குழுவை வைத்து இந்த வழக்கை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

மிகவும் நேர்மையாக விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தில் ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த குழு நீதிமன்றத்துக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன், அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement