வட மாநில தொழிலாளர் பாதுகாப்பில் கோட்டை விடும் தமிழக போலீசார்

1

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவத்தை, போலீசார் தடுக்க முடியாமல், கோட்டை விடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


தமிழகத்தில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உள்ளனர். கடந்தாண்டில் சென்னை மீ ஞ்சூரில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த உ.பி.,யைச் சேர்ந்த அமர்பிரசாத் என்ற நபர் உயிரிழந்தார். அவரின் உடலை காட்ட வேண்டும் என, வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பு



இச்சம்பவத்திற்கு பின், தமிழகம் முழுதும் தங்கியுள்ள, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து, போலீசார் ஆய்வு செய்தனர். தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கணக்கெடுப்பும் நடத்தினர்.


அப்போது, ஒடிஷா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், உ.பி., சத்தீஸ்கர், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான், தமிழகத்தில் அதிகம் இருப்பது தெரியவந்தது.


அப்போது, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், வெவ்வேறு குழுக்களாக தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவர்களுக்குள் பல ஏஜன்டுகள் இருப்பதால், அவர்கள் வாயிலாக, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டனர்.


காவல் நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய பதிவேடுகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் எளிதில் போலீசாரை அணுகும் வகையில், ஹிந்தி தெரிந்த போலீசாரின் மொபைல் போன் எண்கள், அவர்களுக்கு தரப்பட்டன.


ஆனால், காவல் நிலைய போலீசார், வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு செல்வது இல்லை. எப்போதாவது கூட்டம் போட்டு, அதிகாரிகளிடம் கணக்கு காட்டி விடுகின்றனர் என்ற, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

நடவடிக்கை



இதுகுறித்து, சமூக ஆர்வலர் செந்தில் கூறியதாவது: சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சூராஜ், 20, என்ற வாலிபரை, போதை சிறார்கள் அரிவாளால் வெட்டி, சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' வெளியிட்டனர்.


சிறுவர்கள் என்பதால், போலீசாரும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட வாலிபருக்கு தரமான சிகிச்சை அளித்து, அவரின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து இருக்க வேண்டும். ஆனால், அவசர கதியில் நம் மாநிலத்தை விட்டு அனுப்பி விட்டனர்.


இரு தினங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராமாசங்கர், 23, என்ற வாலிபர் தாக்கப்பட்டு, அவரிடம் இருந்து மொபைல் போன், பணம் பறிக்கப்பட்டு உள்ளது.


பெயரளவில், வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்து விட்டோம் என, போலீசார் கூறி வருவதால், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இனியும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படாமல் இருக்க, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement