கோவை மெட்ரோ திருத்திய திட்ட அறிக்கை: தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது மெட்ரோ நிறுவனம்
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பியுள்ளது.
கோவையில், மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது.
முதல்கட்டமாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முதல் விமான நிலையம் வரை அவிநாசி ரோட்டில் 20.4 கி.மீ., மெட்ரோ பாதை, 18 இடங்களில் நிறுத்தங்கள், கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரை சத்தி ரோட்டில் 14.4 கி.மீ., மெட்ரோ பாதை, 14 இடங் களில் நிறுத்தங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தது.
இது, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு மூலமாக அனுப்பப்பட்டது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆய்வு செய்து, மெட்ரோ ரயில் கொள்கையை சுட்டிக் காட்டி, திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது. கோவையில் உள்ள மக்கள் தொகை, வாகன போக்குவரத்து வேகம், போதிய நிலம் இல்லாதது, நிலம் கையகப்படுத்த அதிகம் செலவிட வேண்டியிருப்பது, அதிகமான பயணிகள் செல்வர் என, யூகத்தின் அடிப்படையில் தெரிவித்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, வேறு திட்டங்களை பரிசீலிக்க அறிவுறுத்தியது.
அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, திட்ட அறிக்கையை மேம்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி, திட்ட அறிக்கையில் கூடுதலாக என்னென்ன விஷயங்கள் சேர்க்க வேண்டுமென சென்னை மெட்ரோ நிறுவனத்தினர் விவாதித்தனர்.
தற்போதைய மக்கள் தொகை, எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் மக்கள் பெருக்கம், 'மாஸ்டர் பிளான்' அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், நகரின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவற்றை சேர்த்து திருத்திய திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கூறுகையில், 'மெட்ரோ திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல்கட்ட பணி முடிந்தது. சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரும் பெரிய நகராக கோவை இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் பெருகி வருகின்றன. மெட்ரோ பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். மெட்ரோ திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதை விளக்கும் அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்' என்றனர்.
நில அளவீடு திருப்தி
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ள இரு வழித்தடத்திலும் எவ்வளவு அகலம், எவ்வளவு நீளத்துக்கு நிலம் தேவையென அளவீடு செய்தோம். யார் யாரிடம் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்கிற பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.
ரோட்டுக்கு கீழ் என்னென்ன சேவைகள் எவ்வளவு துாரத்துக்கு இருக்கின்றன என்பதையும் அளவீடு செய்து, அதை மாற்றி அமைக்க உத்தேசமாக எவ்வளவு செலவாகும் என அறிக்கை கொடுத்தோம். நில அளவீடு அறிக்கை திருப்திகரமாக இருப்பதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் கடிதம் கொடுத்திருக்கிறது,'' என்றார்.
இது காலத்தின் கட்டாயம். அநேகமாக பிஜேபி ஆளும் அணைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ஓடிக்கொண்டிருக்கிறது. நம் மாநிலத்தில் வர நம்மக்களே எதிர்ப்பு. என்னத்த சொல்ல ..
இப்போதிருக்கும் மாநகர மெட்ரோ திட்டங்களே பல ஆண்டுகளுக்குப் பிறகும் கடும் நஷ்டத்தில்தான் ஓடுகின்றன. சென்னையில் கூட மெட்ரோவால் வாகனப் பெருக்கம், சாலை நெருக்கடி குறையவில்லை. இப்படியிருக்க குறைந்த நெருக்கடியுள்ள நகரங்களில் மெட்ரோ முதலீடு கடன் சுமையை கடுமையாக ஏற்றும். அப்பாவி கிராமத்து ஏழைகளின் தலையில் வட்டி சுமை ஏறும்.
ரகசிய அறிக்கையாக சமர்ப்பிப்பதை பொது மக்களிடம் விவாதித்தால் செய்யும் கோமாளித்தனம் அனைவருக்கும் தெரியும்.