சொல்கிறார்கள்: டிச.,16

சொல்கிறார்கள் / 16/01/26 / வெள்ளி இதழ் (வெளியூர் பதிப்புகள்) ---- அவள் விகடன், டிச., 30, 2025, பக்: 54 --



வாழ்க்கையை

சரி செய்ய

வழி தேடினால்

கரை சேரலாம்!



கடந்த 30 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வரும், கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த, 53 வயதான அமலோற்பவமேரி:

எனக்கு சொந்த ஊரே இந்த கிராமம் தான். மேரி அக்கா என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். என் கணவர் பெயர் யாகோபு. இந்த ஊரில் முதல் சாப்பாட்டு கடை எங்களுடையது தான்.

சமையலில் கணவருக்கு நல்ல கைப்பக்குவம் உண்டு என அனைவரும் சொல்வர். சாப்பாட்டு கடையில் கூட்டம் நிரம்பி வழியும். அவர் நன்கு சம்பாதித்திருந்தால், இந்நேரம் மாடி வீடே கட்டியிருக்கலாம். ஆனால், நிறைய மது குடித்து, தன் திறமையை அழித்து, எங்களையும் கடனில் தள்ளி விட்டார்.

முறையாக கடையையும் திறக்க மாட்டார்; அதனால் வாடிக்கையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். குழந்தை பிறந்த பிறகும், அவருடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. சாப்பாட்டுக்கு கூட சரியாக பணம் தராத அளவுக்கு, மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். குழந்தைக்கு அடுத்த வேளை சோறு போடவும் வழி இல்லை.

அவருடைய சாப்பாட்டு கடையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு இருந்தது. அதனால், சாப்பாட்டு கடை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், குழந்தையை வைத்துக் கொண்டு, தனியாக சமாளிக்க முடியாது என்பதால், இட்லி கடை ஆரம்பித்தேன்.

என், 23 வயதில் கடையை ஆரம்பிக்கும் போது, 100 ரூபாய் கடன் வாங்கி தான் ஆரம்பித்தேன். இப்போது, 53 வயது. இந்த 30 ஆண்டுகளில், கடைக்கு விடுமுறை விட்டது மிகவும் குறைவான நாட்கள் தான்.

அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து விடுவேன். இட்லிக்கு மாவு அரைத்து, சாம்பார், சட்னி தயார் செய்து, 6:00 மணிக்கெல்லாம் இட்லி அவிக்க ஆரம்பித்து விடுவேன். 7:00 மணிக்கு வியாபாரம் துவங்கும். காலை 9:00 மணி வரை வியாபாரம் மும்முரமாக இருக்கும். என் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

வியாபாரம் முடிந்ததும் பாத்திரம் கழுவுவது, இடத்தை சுத்தம் செய்வது, அடுத்த நாளைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என மதியம் 1:00 மணி வரை வேலை இருக்கும். ஒரு நாளைக்கு, 200 இட்லிகள் வரை விற்பனையாகும். என் வருமானத்தில் தான், மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்; கணவரையும் காப்பாற்றுகிறேன். வாழ்க்கை சரியாக இல்லை என்று புலம்புவதை விட, சரி செய்ய வழி தேடினால், கரை சேர்ந்து விடலாம்!

***

Advertisement