நோட்டாவை ஆதரிக்காதீங்க; மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது; மோகன் பாகவத் பேட்டி

11


மும்பை: நோட்டாவை ஆதரிப்பது மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது என நாக்பூர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி, ஆளும் மஹாயுதி கூட்டணி சாதித்தது.

இந்நிலையில், ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூர் உள்ளாட்சித் தேர்தலில் அதிகாலையிலேயே ஓட்டளித்தவர்களில் மோகன் பாகவத்தும் ஒருவர். அவர் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:

ஒரு ஜனநாயக அமைப்பில், அரசை தேர்ந்தெடுப்பதற்கு ஓட்டளிப்பது அவசியம், எனவே அது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சரியான வேட்பாளருக்கு ஓட்டளிப்பது நமது கடமை.


இது இன்றைய முதல் கடமை, அதனால்தான் நான் முதலில் வரிசையில் நின்று ஓட்டளித்துள்ளேன். நோட்டாவை ஆதரிப்பது மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.


இன்று நடந்த தேர்தலில் யார் வெற்றி மகுடம் சூடுகிறார்கள் என்பது நாளை ஓட்டுகளை எண்ணி முடிவு அறிவிக்கும் போது தெரிந்துவிடும்.

Advertisement