குப்பை கொட்டப்படும் இடங்களில்.. சிறிய பூங்கா! . 20 'ஹாட் ஸ்பாட்' களில் அமைக்க திட்டம்

கோவை, மாநகராட்சி பகுதிகளில் குப்பை குவிக்கப்படும், 20 'ஹாட் ஸ்பாட்' இடங்களில் முதற்கட்டமாக தனியார் பங்களிப்புடன் 'சிறிய பூங்கா'க்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.



கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் பகுதிகளில் தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. வெள்ளலுார் கிடங்கில் பல ஆண்டுகளாக குப்பை குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் துர்நாற்றம், நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

தற்போது குப்பை மேலாண்மை என்பது பெரும் சவாலாக உள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டும் பொது மக்கள் குப்பை வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு குப்பை குவிக்கப்படும் இடங்கள் 'ஹாட் ஸ்பாட்'களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு குப்பை கொட்டினால் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. இருப்பினும் மாநகராட்சியின் கடும் நடவடிக்கையின்மை, மக்களிடம் நிலவும் அலட்சியம் காரணமாக குப்பை மேலாண்மை என்பது சவாலாகவே இருந்துவருகிறது.

குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டிய இடங்கள், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வாகனங்களில் வந்து 'பல்க் வேஸ்ட்' கொட்டுவதும் நடக்கிறது. வாகன பதிவு எண் வாயிலாக விதிமீறலில் ஈடுபடுவோரின் வீடுகளுக்கே நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க பொது மக்களிடம் மனமாற்றத்தின் வாயிலாக குப்பை குவிக்கப்படுவதை தவிர்க்க 'ஹாட் ஸ்பாட்' இடங்களில் 'சிறிய பூங்கா' அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியமோ, வீடு தோறும் குப்பை சேகரிப்பு விஷயத்தில் துாய்மை பணியாளர்களிடம் கடமை உணர்வும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

20 இடங்களில்! மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் ஒருபகுதியாக குப்பை சேரும் 'ஹாட் ஸ்பாட்' இடங்களில் சிறிய பூங்கா அமைக்க உள்ளோம்.

'முதற்கட்டமாக, மாநகராட்சி, 80வது வார்டில், கெம்பட்டி காலனி உட்பட குப்பை கொட்டப்படும், 20 'ஹாட் ஸ்பாட்' இடங்களில் தனியார் இப்பணியை துவங்கவுள்ளனர்.

இதில் கண்களை கவரும் பூக்கள் உள்ளிட்டவை வளர்த்து பராமரிக்கப்படும். தொடர்ந்து மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்' என்றனர்.

Advertisement