சிறந்த வீரர் ஸ்டார்க்: ஐ.சி.சி., விருதுக்கு தேர்வு

துபாய்: சிறந்த வீரருக்கான (டிசம்பர், 2025) ஐ.சி.சி., விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் தேர்வானார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், நியூசிலாந்தின் ஜேக்கப் டபி பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இதில், சிறந்த வீரராக ஸ்டார்க் தேர்வானார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 'வேகத்தில்' மிரட்டிய ஸ்டார்க், அதிகபட்சமாக 31 விக்கெட் சாய்த்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட், சுனே லுஸ், இந்தியாவின் ஷைபாலி வர்மா பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீராங்கனையாக லாரா தேர்வானார். கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் (255 ரன்), 'டி-20' (137 ரன்) தொடர்களை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்திருந்தார் லாரா.

Advertisement