உலக விளையாட்டு செய்திகள்

பைனலில் மொராக்கோ
ரபாத்: மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. நைஜீரியா, மொராக்கோ அணிகள் மோதிய அரையிறுதி, கூடுதல் நேரத்தின் முடிவில் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய மொராக்கோ 4-2 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் செனகல் அணி 1-0 என, எகிப்தை வென்றது.


மடிசன் கீஸ் தோல்வி


அடிலெய்டு: ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில், சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோ மோதினர். இதில் ஏமாற்றிய மடிசன் கீஸ் 4-6, 6-4, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

அரையிறுதியில் அர்ஜென்டினா

அசன்சியன்: பராகுவேயில், தெற்கு-மத்திய அமெரிக்க பெண்களுக்கான ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 25-19 என, உருகுவேயை வென்றது. ஏற்கனவே கொலம்பியா, எல் சால்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் பராகுவேயை சந்திக்கிறது.

எக்ஸ்டிராஸ்

* புனேயில், வரும் ஜன. 19-23ல் 'கிராண்ட் டூர் ரோடு ரேஸ்' சைக்கிள் பந்தயம் நடக்கவுள்ளது. இதில் 35 நாடுகளை சேர்ந்த, 29 அணிகள் பங்கேற்கின்றன. இதன் விளம்பர துாதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நியமிக்கப்பட்டார்.

* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், தெற்காசிய புட்சல் கால்பந்து சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய லீக் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

* தாய்லாந்தில் நடக்கும் பாங்காக் ஓபன்-2 சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகேரு யுசூகி ஜோடி 6-3, 6-4 என இந்தியாவின் நிக்கி பூனாச்சா, தாய்லாந்தின் இசாரோ ஜோடியை வீழ்த்தியது.

* அமெரிக்காவில் நடக்கும் மோட்டார் சிட்டி ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 1-3 (3-11, 13-11, 9-11, 4-11) என, அமெரிக்காவின் டிமோதி பிரவுனெல்லிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன் 3-1 (11-8, 10-12, 11-2, 13-11) என, எகிப்தின் முகமது அபூல்கரை வென்றார்.

Advertisement