பைக் சாவியால் குத்தி இளைஞர் கொலை

பாலக்காடு: பாலக்காடு அருகே, தகராறின் போது பைக் சாவியால் குத்தி இளைஞரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் பொல்ப்புள்ளி அம்பலப்பறம்பை சேர்ந்தவர் சரத், 35. இவரது மனைவி ராகி.

ராகியின் சகோதரி ராஜியின் கணவர் பிரமோத்குமார், 41. கடந்த சில ஆண்டுகளாகவே மனைவி ராஜியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ராஜி தன் மகனுடன் சிற்றுார் அம்பாட்டுப்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்ற மகனை அழைத்து வருமாறு, சரத்திடம் ராஜி கூறியுள்ளார்.

சரத் பள்ளிக்குச் சென்று சிறுவனை அழைத்து திரும்பியபோது, அங்கு வந்த பிரமோத்குமார் அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த அவர், தனது கையிலிருந்த பைக் சாவியால் சரத்தின் கழுத்தில் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த சரத்தை, பிரமோத்குமாரே, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். சிகிச்சை பலனின்றி சரத் இறந்தார்.

கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயமே மரணத்திற்கு காரணம் என, தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கொலை வழக்கு பதிந்து, பிரமோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement