சாஸ்த்ரா பல்கலை நில ஆக்கிரமிப்பு விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

1

தஞ்சை சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தஞ்சை மாவட்டம், திருமலைசமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்தை, பல்கலை நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், அதற்கான தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலை தரப்பில் கோரப்பட்டது.

இதை நிராகரித்த தமிழக அரசு, நான்கு வாரத்திற்குள் இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு எதிராக பல்கலை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமித்த நிலத்தை கையகப்படுத்தும்படி தமிழக அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சாஸ்த்ரா பல்கலை மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விவகாரத்தில், பல்கலையின் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. எனவே, மாநில அரசின் மூன்று மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு, அது தொடர்பாக ஆய்வு செய்து, நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் பின்னரே, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பொது நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.


இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement