புதிய விளையாட்டு கலாசாரம் * பிரதமர் மோடிக்கு முதல்வர் பாராட்டு

1

கோரக்புர்: ''பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவில் புதிய விளையாட்டு கலாசாரம் உருவாகியுள்ளது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டினார்.
விளையாட்டுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார். 2018ல் 'கேலோ இந்தியா' யூத் விளையாட்டு துவங்க காரணமாக இருந்தார். தொடர்ந்து கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு, பாரா விளையாட்டு, பல்கலை., அளவிலான போட்டிகள் என இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டில்லியில் நடந்தது. 2030ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடந்த ஏற்பாடு நடக்கின்றன. இதற்காக ஆமதாபாத்தில் விளையாட்டு நகரம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,''கடந்த 2014க்கு முன், சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்துவது அரசின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது இல்லை. விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை என மக்கள் நம்பினர். பெரும்பாலும் இவை புறக்கணிக்கப்பட்டன. ஆனால் கடந்த 11 ஆண்டில் எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோடி, இந்தியாவில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கி உள்ளார். இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படத் துவங்கி விட்டால், தேவையற்ற விஷயங்களில் அடிமைப்படுவதில் இருந்து விடுபடுவர்,''என்றார்.

Advertisement