அமைச்சர் பெயரில் ஆட்டம் போடும் தி.மு.க., நிர்வாகி!

''பெ ண் அதிகாரி மேல ஏகப்பட்ட புகார்கள் குவியுதுல்லா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துல, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... பொதுவா, இதுக்கு பொறியியல் படிச்ச அதிகாரிகளை தான் நியமிப்பாவ வே...

''ஆனா, மீன்வள அறிவியல் படிச்ச பெண் அதிகாரியை நியமிச்சதால, அவங்களால திறமையா நிர்வாகம் பண்ண முடியாம, ஏகப்பட்ட குளறுபடிகளை பண்ணுதாங்க... பொறியியல் கல்லுாரி முதல்வர்களை, மரியாதை குறைவா, மட்டமா திட்டுதாங்க வே...

''எதுக்கு எடுத்தாலும், ஊழியர்கள் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுத்துடுதாங்க... பெரிய இடத்தின் குடும்ப நட்பு இருக்கிறதால, இவங்களை மாத்த முடியல... அதனால, 'சீக்கிரமே அதிகாரிக்கு பதவி உயர்வு குடுத்து, இந்த துறையில இருந்து அனுப்பிடுங்க'ன்னு கோட்டை அதிகாரிகளே சொல்லிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''இப்படி உட்காருங்க தம்பி... உங்க தங்கை திவ்யா ஊருக்கு போயாச்சா...'' என, பெஞ்சில் அமர்ந்த வாலிபரிடம் விசாரித்த அன்வர்பாயே, ''மரங்களை வெட்டி கடத்துறாங்க பா...'' என்றார்.

''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டத்தில், தனியார் இடங்களில் வளர்க்கிற சில்வர் ஒக் மரங்களை வெட்ட, இதுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிற மாவட்ட கமிட்டியிடம் அனுமதி வாங்கணும்... ஆனா, ஒரு இடத்துல மரங்கள் வெட்ட அனுமதி வாங்கிட்டு, அதை ஒட்டிய இடங்கள்ல இருக்கிற சில்வர் ஓக் மரங்களையும் வெட்டி கடத்திடுறாங்க பா...

''இது சம்பந்தமா, நேர்மையான வனத்துறை ஊழியர்கள் சிலர், அதிகாரிகளுக்கு தகவல் குடுத்தாலும், மரம் வெட்டும் கும்பலை கட்டுப்படுத்த முடியல... 'அவங்களுக்கு துறையின் மேலிடம் வரைக்கும் செல்வாக்கு இருக்கிறது தான் காரணம்'னு வனத்துறை ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அமைச்சர் பெயரை சொல்லி, ஆட்டம் போடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் மேற்கு ஒன்றியத்துல, தி.மு.க., நிர்வாகி ஒருத்தர் இருக்கார்... இவரது நெருங்கிய உறவினர், மண்ணச்சநல்லுார் யூனியன் ஆபீஸ்ல, அதிகாரியா இருக்கார் ஓய்...

''இவர், யூனியன் மூலமா விடப்போற, 'டெண்டர்' பற்றிய தகவல்களை, தி.மு.க., புள்ளிக்கு சொல்லிடறார்... உடனே, பி.டி.ஓ.,க்களிடம் தி.மு.க., புள்ளி, 'அந்த பணிகளை என் பினாமிகளுக்கு தரணும்... இல்லைன்னா பணிகளுக்குரிய கமிஷன் தொகையை தந்துடணும்'னு கறாரா கேக்கறார் ஓய்...

''பணிகளை ஒதுக்கினாலும், தரமில்லாம பண்றார்... அதிகாரிகள் கேள்வி கேட்டா, அமைச்சர் நேரு பெயரை சொல்லி மிரட்டறார்... சமீபத்துல, யூனியன் ஆபீஸ் உதவியாளர் வேலைக்கு, தன் உறவினரிடம், 20 லட்சம் ரூபாயை வாங்கிண்டு, அவருக்கு வேலை தரும்படி, பி.டி.ஓ.,க்களுக்கு தி.மு.க., புள்ளி நெருக்கடி குடுத்தார் ஓய்...

''பி.டி.ஓ.,க்கள், கலெக்டர் சரவணனிடம் முறையிட, அவர் நியாயமான முறையில் வேற ஒருத்தருக்கு அந்த வேலையை குடுத்துட்டார்... இதனால, பி.டி.ஓ.,க்கள் மேல, தி.மு.க., புள்ளி கோபத்துல இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''செந்தில்குமார் இங்கன உட்காரும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement