குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

1

புதுடில்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழாவில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். அதன் பின் நடக்க உள்ள இரு நாட்டு தலைவர்களின் கூட்டத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆண்டுதோறும் டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், வெளிநாட்டு தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது நம் நாட்டின் பாரம்பரிய நடைமுறையாக இருந்து வருகிறது. இதன் மூலம், இந்தியாவின் சர்வதேச நட்பு உறவுகள் உலக அரங்கில் வலுப்படுத்தப்படுகின்றன.

வரும் 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் ஆகியோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக இருவரும் வரும் 25ம் தேதி டில்லி வருகின்றனர். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும், இந்த பயணத்தின் போது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே, 2004ம் ஆண்டு முதல் நெருங்கிய நட்புறவு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கமிஷனர்களின் குழுவினர் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டனர். அப்போது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெற்றன. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. இரு தரப்பு வர்த்தகத்தின் அளவு 12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு வரும் 27ல் நடக்க உள்ளது. அப்போது தடையற்ற ஒப்பந்தம் கையெழுத்தாக கூடும். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் இரு தரப்பு வர்த்தக உறவின் மதிப்பு மேலும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமெரிக்காவின் இறக்குமதி வரி கொள்கைகள் குறித்து உலகளவில் கவலை அதிகரித்து வரும் சூழலில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement