பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்

இந்தூர்; பொலிவுறு நகரத்தின் மாதிரி என்று மத்திய அரசு கூறி வரும் இந்தூரில் மக்களுக்கு குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் கூறி உள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் மாசுடைந்த குடிநீரை பருகிய 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 20க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந் நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் சிலரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாசடைந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட பாகீரதபுரா பகுதிக்கும் நேரில் சென்று அங்குள்ளோரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது;

பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். பலர் பலியாகி உள்ளனர், ஏராளமானோர் உடல்நலம் பாதித்து காணப்படுகின்றனர். நாட்டில் பொலிவான நகரங்களை உருவாக்குவதாக மத்திய அரசு வாக்குறுதி தருகிறது.

ஆனால் பொலிவுறு நகரத்தின் மாதிரி என்று மத்திய அரசு கூறி வரும் இந்தூரில் மக்களுக்கு குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் இல்லை. இதற்கு அரசே முழு பொறுப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் துணை நிற்கிறேன்.

எல்லா நகரங்களிலும் சுத்தமான குடிநீர் தர வேண்டும் என்ற பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது.

இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement