யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை

15

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார்..

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி, போட்டியிட வேண்டிய சீட் தொடர்பான விவாதங்கள் ஒவ்வொரு கட்சியிலும் சூடு பிடித்துள்ளது.


ஆளும்கட்சியான திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள், கூடுதல் சீட் கேட்க திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி முன்னணி பிரமுகர்கள் சிலர், கூடுதல் சீட் கோரிக்கையுடன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையையும் முன் வைத்து பேச தொடங்கியுள்ளனர்.

தமிழக காங்கிரசில் ஒரு பிரிவினர் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், இன்னொரு பிரிவினர் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்றும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து ஒருமித்த கருத்து அல்லது முடிவை எடுக்கும் வகையில் நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிய காங்கிரசின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, புதுடில்லியில் எதிர்க்கட்சி, தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

அனைவரின் கருத்துகளையும் ராகுல் கேட்டறிந்தார். தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும்.

பொது வெளியில் கூட்டணி பற்றி பேசுவது,. ட்வீட் போடுவது,அறிக்கை கொடுப்பது என இவை எல்லாம் வேண்டாம் என்று ராகுல் அறிவுறுத்தி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறதோ, தமிழக காங்கிரஸ் அதை பின்பற்றும்.

இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

Advertisement