ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!

3

புதுடில்லி: ஈரானில் சிக்கி தவித்த இந்தியர்களில் ஒரு பகுதியினர், இன்று வணிக விமானத்தில் டில்லி திரும்பினர்.

ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் எதிரொலியாக அந்நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. விலைவாசி உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், அதை கண்டித்து லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

போராட்டங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், வழிபாட்டு தலங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈரான் அரசு இறங்க, கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பணவீக்கம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, நீடிக்கும் போராட்டம் ஆகிய காரணங்களால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அங்கு சிக்கி தவிக்கும் 9000 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் அரசு சார்பில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே, ஈரானில் தவித்த இந்தியர்களில் ஒரு பகுதியினரை அழைத்துக் கொண்டு மஹன் ஏர் நிறுவனத்தின் வழக்கமான விமானம் இன்று டில்லி வந்து சேர்ந்தது.

வந்தவர்களில் பெரும்பான்மையானோர் மாணவர்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. டில்லி வந்தவர்களில் ஒருவரான அலி நாகி என்பவர் கூறுகையில், 'ஈரானில் நாங்கள் எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை' என்றார். ஈரானில் வன்முறை காரணமாக, தகவல் தொடர்பு, இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, வந்த பயணிகள் தெரிவித்தனர்.

Advertisement