உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்

8

சென்னை: புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை.

இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது.

2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழகத்தின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் இபிஎஸ். தமிழகத்தை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் முதல்வர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் இபிஎஸ்.

இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.

இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா கூறி உள்ளார்.

Advertisement