அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நல்லி செட்டிபாளையம், செல்வ விநாயகர் கோவில் முன், ஊர் பொதுமக்கள் சார்பில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. வழிபாடு நடந்தது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் கும்மியாட்டம் நடந்தது.

அன்னூர் ஜோதிராவ் பூலே கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நாகமாபுதூர் மாலை நேர கல்வி மையத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் கணேஷ்குமார், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில், கல்வி மைய தலைவர் பெருமாள், பொருளாளர் புஷ்பராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

அன்னூர், கூத்தாண்டவர் கோவில் வீதியில், நகர தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பொங்கல் விழாவில் மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் ஹரி, மாவட்ட பிரதிநிதி நாசர், வார்டு செயலாளர் தனலட்சுமி மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவில்பாளையம், பெரிய பாலம் அருகே, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் பொங்கல் விழா நடந்தது. நதியில் பொங்கல் வைத்து நதி அன்னைக்கு நன்றி தெரிவித்து வழிபாடு செய்யப்பட்டது.

சிறுவர், சிறுமியர், பெண்கள் பங்கேற்ற பறையாட்டம் நடந்தது. இளைஞர்களின் சிலம்பாட்டம் அனைவரையும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து உறியடிக்கும் வைபவம் நடந்தது.

பொங்கல் விழாவில் நதியின் பெருமை குறித்தும், நதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement