எஸ்.என்.எம்.வி. கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை: ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் பண்டிகை 'சமச்சீர் பொங்கல்' விழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமை தாங்கிய கல்லூரியின் தலைவர் மஹாவீர் போத்ரா சிறப்புரையாற்றினார். விழாவின் தொடக்கமாக, பூரணகும்ப மரியாதை, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் எனப் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் விழாவை கொண்டாடினர்.

தொடர்ந்து கும்மி, ரேக்ளா பந்தயம், கபடி, கயிறு இழுத்தல், உறியடித்தல் மற்றும் சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழகத்தின் கிராமிய மரபை உணர்த்தும் வகையில் மாட்டுவண்டிகள், நாட்டு மாடுகள், குதிரை, சண்டை சேவல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், பழங்கால வாழ்வியலை நினைவூட்டும் குடிசை, கிணறு, தெப்பக்குளம், அரவைக்கல் மற்றும் உரல் போன்ற பொருட்களின் கண்காட்சி இடம்பெற்றது. எஸ்.என்.வி. பள்ளி செயலாளர் கோபால் புராடியா, கல்லூரியின் துணை செயலாளர் பாரத்குமார் ஜெகமணி, முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத் துறை இயக்குனர் முத்துக்குமார் மற்றும் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமச்சீர் பொங்கல் விழாவில் பங்கேற்ற கல்லூரியின் தலைவர், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர்.

Advertisement