கோவை புறநகரில் பொங்கல் விழா கோலாகலம்
கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில் ஆகும். தைப்பொங்கலை முன்னிட்டு அதிகாலையில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாளுக்கு திருப்பாவை சேவித்து, திருவாராதனம் முடிந்து சாற்று முறை சேவிக்கப்பட்டது.
மங்கள ஆரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இரவு நான்கு ரத வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து, மகர சங்கராந்தி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
பெ.நா.பாளையம் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முதலில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. தொடர்ந்து, பொங்கலிட்டு, உழவுத் தொழிலுக்கு நன்றி கூறும் நாட்டுப்புற கும்மி பாடலுடன் இயற்கை அன்னைக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
விளையாட்டு போட்டி மற்றும் நாட்டுப்புற நடன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், அனைவரையும் ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். ஏற்பாடுகளை மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.
பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சூரிய பொங்கல், கோமாதா பூஜை நடந்தன. தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய இசைகளான பறை, ஜமாப்பு முதலிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு, கிராமிய நடனம் நடந்தது.
தொடர்ந்து, மார்கழி மாத வழிபாட்டில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், அலுவலர்களும் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாக குடும்பத்தார், அலுவலக நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.
பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும், ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் சங்கமும் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடியது. வள்ளி கும்மியோடு நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து எலைட் சங்கத்தின் தலைவர் கோபிநாத், செயலாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் அருண் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவை ஒட்டி கோலப்போட்டி, உறியடித்தல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சிவகுமார் விழாவை ஒருங்கிணைத்தார்.
சூலுார் தை மாதப்பிறப்பை ஒட்டி சூலூர் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், முருகன் கோவில்கள் மற்றும் கிராம தேவதைகள் அருள்பாலிக்கும் கோவில்களில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அலங்கார பூஜைக்கு பின் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். கோவில்களில் வீடுகளில் பக்தர்கள் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தை மகளை வரவேற்கும் விதமாக பெண்கள் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து வழிபட்டனர். எம்.பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோவிலில் நடந்தது. சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னுார் காரேகவுண்டன் பாளையம் ஊராட்சியில், நல்லி செட்டி பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு கோலமிட்டு அலங்கரித்து இருந்தனர்.
பொங்கல் விழாவில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அப்துல் வஹாப், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் தூய்மை பணியாளர்கள் கும்மியடித்து பொங்கலை கொண்டாடினர். அன்னூர் ஒன்றியத்தில் ஒட்டர்பாளையம், பொகலூர், குப்பேபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
சமத்துவ பொங்கலை முன்னிட்டு, ஊராட்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட பிளக்ஸ் வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த பிளக்ஸில் முதல் முறையாக, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் படமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.