சிறுமிக்கு கை அகற்றப்பட்ட விவகாரம் நிபுணர் குழுவிடம் பெற்றோர் வாக்குமூலம்

பாலக்காடு: பாலக்காடு பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமிக்கு, சிகிச்சையின் போது வலது கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு நியமித்த நிபுணர் குழுவிடம் சிறுமியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பல்லச்சேனை பகுதியைச் சேர்ந்த பிரசீதாவின் மகள் வினோதினி, 9. அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். கடந்த செப். 24ம் தேதி தரையில் விழுந்து வினோதினி காயமடைந்தார்.

பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர். சிறுமியின் வலது கையில் பிளாஸ்டர் போட்டு அனுப்பினர். வீட்டிற்கு வந்து பின் வலி அதிகரித்து, கை வீங்கியது. மீண்டும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் காண்பித்தபோது, தொடர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர்.

ஆனால், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தகுந்த சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் கை பாதித்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து கையை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில், சிகிச்சையில் மருத்துவர்கள் தரப்பில் தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து நிபுணர் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலக்காடு மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் வைத்து நேற்று நிபுணர் குழு, சிறுமியையும் அவரது பெற்றோரையும் சந்தித்து விசாரணை நடத்தியது.

இது குறித்து பிரசீதா கூறுகையில், ''நடந்த விஷயங்கள் அனைத்தையும் நிபுணர் குழுவிடம் தெரிவித்தோம். எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற பயம் உள்ளது. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை, என்றார்.

Advertisement