இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் ஏமாற்ற ம் அரசு முடிவில் மாற்றம் இல்லாததால்

பெ.நா.பாளையம்: குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவில் மாற்றம் இல்லாததால், அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடப்பட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகள், நீலம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம் கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, கீரப்பாளையம் ஆகிய, 9 ஊராட்சிகள் என, 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது.

இதில், குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியில் பல்வேறு கூட்டங்களை நடத்தி, மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது குறித்து குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சியில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், 'ஊராட்சி சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும்.

இதனால் விவசாய கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், வீடு கட்ட, ஒரு சதுர அடிக்கு, 10 ரூபாய் கட்டணம் வரை நிர்ணயம் செய்யப்படும். தற்போதுள்ள ஊராட்சிகளில் கட்டுமான பணிக்கு அனுமதி உடனடியாக வழங்கப்படுகிறது.

மாநகராட்சியாக மாறும் போது கட்டுமான பணிக்கான அனுமதி பெறுவது பெரும் சிக்கல் ஏற்படும். தற்போது மத்திய, மாநில அரசுகள் ஏழை எளிய மக்கள் வீடு கட்ட, 2.65 லட்சம் ரூபாய் மானியமாக ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குகிறது. மாநகராட்சியாக மாறும்போது இத்திட்டத்தின் பலன் பொதுமக்களுக்கு கிடைக்காது. இதனால் சிறிய பட்ஜெட்டில் வீடு கட்டும் ஏழைகளின் கனவு நிறைவேறாது.

இதுபோல ஊராட்சிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு திட்டங்கள் மாநகராட்சியில் வசிக்கும் போது கிடைக்காது. வரி உயரும் அபாயமும் உள்ளது' என்றனர். இந்நிலையில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னீர்மடை, பிளிச்சி ஆகிய ஊராட்சிகளை இரண்டாக பிரித்தது.

இதனால் பன்னீர்மடை மற்றும் பிளிச்சி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுடைய பகுதி ஊராட்சியை இரண்டாக பிரித்ததால், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவு கிடைக்கும். இதனால் அடிப்படை வசதிகள் பெருகும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆனால், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவும் வெளியிடப்படாததால், அப்பகுதியில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருந்தாலும், தமிழக அரசு தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து, குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்யும் என, எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

Advertisement