குழந்தைகள் குடும்பத்தில் போலீசார் பொங்கல் விழா

போத்தனூர்: கோவை, போத்தனூர் அருகே வெள்ளலூர் சாலையில் குழந்தைகள் குடும்பம் எனும் காப்பகம் உள்ளது. பொங்கல் முன்னிட்டு போத்தனூர் போலீசார் சார்பில், பொங்கல் விழா, போலீஸ் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் நடந்தது. முதல் நிகழ்வாக காலையில் பொங்கல் வைக்கப்பட்டது.காப்பகத்திலுள்ள குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்ற இசை நாற்காலி, சாக்கு, லெமன் ஸ்பூன் ஓட்டங்கள் கயிறு இழுத்தல் உள்ளிட்டவை நடந்தன.

மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் டிபன்பாக்ஸ், திருக்குறள், நீதிக்கதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதையடுத்து மதியம் அனைவருக்கும் இனிப்புடன் விருந்து பரிமாறப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கண்ணையன் உள்பட, 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தார் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர் அசோக் குமார் கூறுகையில், போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒரு சம்பிரதாயமாக உள்ளது. இதனை மாற்றவும், இத்தகைய ஆதரவற்றோருக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்பட்டது என்றார்.

Advertisement