கீழக்கிடாரம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்பிடிப்பு பகுதி பாதிப்பு

சிக்கல்: சிக்கல் அருகே கீழக் கிடாரம் ஊராட்சியில் உள்ள பாசன கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் போக்கு பல மாதங்களாக நடக்கிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதி பாதிக்கப்படுவதாகவும், குப்பை தொட்டிகள் வைக்கப்படாததே இந்த நிலைக்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட வாலிநோக்கம் விலக்கு பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வீட்டில் இருந்து வரக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகள் மூடையாக கட்டப்பட்டு அருகில் உள்ள கீழக்கிடாரம் பாசன கண்மாய்க்குள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது:

கீழக்கிடாரம் கண்மாய் 2850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாயில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மூடையாக கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு கொட்டப்படுகிறது. அதிகளவு மருத்துவக் கழிவுகளும், கால்நடை களின் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் நீர் பிடிப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

இவ்விஷயத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தனி அலுவலர்கள் மெத்தனப் போக்கை கையாளுகின்றனர். எனவே கண்மாய்க்குள் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் வைத்து அகற்ற வேண்டும். கண்மாய் மாசுபடுவது வேதனைக்குஉரிய செயல் என்றார்.

Advertisement