ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து நேரடி பஸ்கள் மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: தைப்பொங்கல் விடுமுறை முடிந்து நாளை முதல் வெளியூர் செல்ல இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து புறப்பட்டு மதுரை, கோவை, சென்னை, திருப்பூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தற்போது திருச்சி, கோவை, திருப்பூர், சென்னை உட்பட பல்வேறு தொலைதூர நகரங்களில் அதிகளவில் வசித்து, அரசு, தனியார் துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கோவை, ஈரோடு, சென்னை போன்ற நகரங்களில் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஸ்ரீவில்லிபுத்துார் வந்துள்ள மக்கள் நாளை முதல் மீண்டும் தங்கள் வசிப்பிட நகரங்களுக்கு திரும்பி செல்ல உள்ளனர். ஆனால், இவர்கள் சிரமமின்றி செல்வதற்காக போதிய பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இயக்கப்படவில்லை. இதனால் மதுரை, தேனி போன்ற நகரங்களுக்கு நின்று கொண்டே பயணிக்கின்றனர்.

இதனை தவிர்க்க நாளை (ஜனவரி 17) முதல் ஜன.19 வரை ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒருமுறை மதுரைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விருதுநகர், தேனிக்கும் நேரடி பஸ்கள் இயக்க வேண்டும்.

கோவை, திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் வகையில் நேரடி பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement