ஆரோவில்லில் பொங்கல் விழா : வெளிநாட்டினர் உற்சாகம்

வானுார்: ஆரோவில்லில் நடந்த பொங்கல் விழாவில் உள்ளூர்வாசிகளுடன், வெளிநாட்டினர் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவிலில், மோகன கலாசார மையம் சார்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், வெளிநாட்டு பெண்கள் பலர், தமிழர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றனர்.

உள்ளூர் பெண்களுடன் இணைந்து கரும்பு, காய்கறிகளை விநாயகருக்கு படையலிட்டு, மண் பானையில் பொங்கலிட்டனர்.

சமைக்கப்பட்ட பொங்கல், பங்கேற்ற வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் உறியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், நாட்டுப்புற நடனம் போன்ற தமிழர் பண்பாட்டு அடையாளங்களை விளக்கி நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பங்கேற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண், கூறுகையில், 'தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையின் அனுபவத்தை அறிந்து கொள்ள வந்தோம். பொங்கல் விழா எங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. இந்த பொங்கல் விழா குறித்து எங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு எடுத்துரைப்போம். இது போன்று எங்கள் நாட்டிலும், கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்வோம்' என்றனர்.

ஏற்பாடுகளை மோகன கலாசார மைய இயக்குநர் பாலசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement