மாஜி அமைச்சரை விமர்சித்த வழக்கு: யூ-டியூபர் ஆஜராக கோர்ட் உத்தரவு

விழுப்புரம்: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் பற்றி அவதுாறாக தகவல் பதிவிட்ட வழக்கில், யூ-டியூபர் விசாரணைக்கு ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குடியாத்தம் பகுதி யை சேர்ந்தவர் குமரன், யூ-டியூபர். இவர், தனது யூ.டியூப் சேனலில், கடந்தாண்டு டிச., 16ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சண்முகத்தை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் (1) ல் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி சந்திரகாச பூபதி, இந்த புகார் சம்பந்தமாக விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார்.

அதையடுத்து, இது தொடர்பாக கடந்த 12ம் தேதி விசாரணையில் ஆஜரான சைபர் கிரைம் போலீசார், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் பற்றி, திருப்பூர் குமரன் யூ-டியூப்பில் அவதுாறாகவும், கொச்சையாகவும் பேசிய வீடியோ நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதையடுத்து, வரும் மார்ச் 7ம் தேதி குடியாத்தம் குமரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், இது சம்பந்தமாக அவருக்கு சம்மன் அனுப்ப கோரியும் நீதிபதி சந்திரகாச பூபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அ.தி.மு.க., சார்பில் வழக்கறிஞர்கள் ராதிகா செந்தில் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

Advertisement