அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி

2

கவுகாத்தி: அசாம் மாநிலம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.


கவுகாத்தியில் பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்வில் அவர் பேசியதாவது; நீண்ட காலமாக, அசாம் மற்றும் பரந்துப்பட்ட கிழக்கு பகுதியை காங்கிரஸ் புறக்கணித்தது. உள்ளூர் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசியல் ஆதாயத்திற்கே முன்னுரிமை அளித்தது. அவர்கள்(காங்கிரஸ்) வேண்டும் என்றே மாநிலத்தில் பிரச்னையை உருவாக்கினர்.

ஆனால் எங்கள் இரட்டை இன்ஜின் அரசாங்கம் இதுபோன்ற தோல்விகளை மாற்றி அமைக்கிறது. போடோ பகுதிகளுக்கு என ரு.1500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு தொகுப்பை அங்கீரித்துள்ளோம். கோக்ராஜரில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன.


போடோ சமூக நலன்களுக்காக நிர்வாகத்தை வலுப்படுத்த, தனி நலத்துறை மற்றும் கல்லூரி நிறுவப்பட்டு உள்ளது. அசாம்-டில்லி இடையேயான தூரத்தை பாஜ குறைத்துள்ளது. உள்கட்டடைமப்பு மூலம் தொலைதூர பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரித்து உள்ளது.

அசாமின் நம்பிக்கை, பொருளாதார முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்துகின்றன. உலக அரங்கில் மாநிலத்தின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் கலாசாரம் உலகளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அசாமின் பெருமை நாடு முழுமைக்கும் பரவி உள்ளது.


இங்கு ஒரு காலத்தில் கொலைகள் அதிகம் நிகழும் மாநிலமாக இருந்தது. ஆனால் இன்றோ அதன் கலாசாரம், மரபுகளின் வண்ணங்களினால் நிரம்பி உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த அமைதியின்மையை முடிவுக்கு கொண்டு வந்து கல்வி, மேம்பாட்டுக்கான புதிய பாதைகளை திறந்ததே இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Advertisement