தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து

2


இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால், தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்று தீர்மானிக்கக் கூடிய கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணிக்கு கான்வே, ஹென்றி நிகோலஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அந்த அணி 5 ரன் எடுத்திருந்த போது, கான்வே (5), நிகோலஸ் (0) அவுட்டாகினர். அதன்பிறகு வந்த யங் (30) ஓரளவுக்கு தாக்குபிடித்தார்.

இந்தியாவுக்கு எதிரான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மிட்செல், பிலிப்ஸிடன் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். மிட்செல் இந்தியாவுக்கு எதிரான தனது 4வது சதத்தை பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 219 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மற்றொரு புறம் அதிரடியாக ஆடிய பிலிப்ஸூம் 83 பந்துகளில் சதம் அடித்தார். பிலிப்ஸ் 106 ரன்னும், மிட்செல் 137 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு வந்த வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் கேப்டன் பிரேஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன் குவித்தார். இதனால், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

338 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் ஷர்மா (11), கில் (23), ஸ்ரேயாஷ் ஐயர் (3), கேஎல் ராகுல் (1) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதிஷ் குமார் தனது பங்கிற்கு 53 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கோலி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.

சிறப்பாக ஆடிய அவர் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 85வது சதமாகும். கோலிக்கு உறுதுணையாக ஹர்ஷித் ரானா அதிரடியாக ஆடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஹர்ஷித், 52 ரன்னுக்கு அவுட்டானார். இதைத் தொடர்ந்து வந்த சிராஜ், அடுத்த பந்திலேயே டக் அவுட்டானார். இதனால், 8 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அனைத்து அழுத்தங்களும் கோலியின் மீது விழுந்தது. இதனால், தனது ஆட்டத்தின் பாணியை மாற்றி அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

124 ரன் எடுத்திருந்த போது, கிறிஸ்டியன் கிளார்க் பந்தில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து கோலி அவுட்டானார். இதன் காரணமாக, இந்தியாவின் வெற்றி சந்தேகமானது. இறுதியில் குல்தீப் யாதவும் ரன் அவுட்டானார். இதனால் 41 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம், இந்திய மண்ணில் முதல்முறையாக நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை தனதாக்கியுள்ளது.

Advertisement