கவனத்தை ஈர்க்கும் உலோகம், வங்கி துறைகள்

சர்வதேச அளவில் விலை உயர்வால் உலோகத் துறையும், வலுவான கடன் தேவையால் பெரிய வங்கிகளும் தற்போது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய துறைகளாக உள்ளதாக, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்துள்ளார்.

உலோகத் துறை: கமாடிட்டி வர்த்தகத்தில், 10 கிராம் தங்கம் 1.42 லட்சம் ரூபாயையும், வெள்ளி ஒரு கிலோ 2.78 லட்சம் ரூபாயையும் தாண்டியுள்ளது. நிப்டி 50 குறியீட்டைவிட உலோகத் துறை குறியீடு சிறப்பாக செயல்படுகிறது. அலுமினியம், துத்தநாகம், ஈயம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் விலையும் உலகளவில் அதிகரித்து வருகின்றன.

புவிசார் அரசியல் பதற்றங்கள், தொழில் துறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் அதிகரிப்பு, டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, உலோக சந்தை ஏற்றத்தில் உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலாக, ஜெய்சங்கர் ஈடுபடுவது, சிறந்த தீர்வுகளை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கித் துறை: தற்போது வங்கிகளில் டெபாசிட் வளர்ச்சியை விட, கடன் வளர்ச்சி 1.50% அதிகமாக உள்ளது. சந்தையில் நல்ல மதிப்பைப் பெற்றுள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் பெரிய தனியார் வங்கிகளும் கடன் பத்திரங்கள் வாயிலாக, குறைந்த வட்டியில் நிதி திரட்ட முடிவதால் இவை கூடுதல் பலன் பெறுகின்றன.

இது, பொருளாதாரத்தில் வலுவான கடன் தேவையையும், பெரிய வங்கிகளின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.

Advertisement