'அல்மான்ட் கிட்' சளி மருந்துக்கு தமிழகத்திலும் தடை விதிப்பு

சென்னை: மத்திய பிரதேசத்தில், 'டைஎத்திலீன் கிளைக்கால்' கலந்திருந்த, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியாகினர். தற்போது, அந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்வலை ஏற்பட்டுஉள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற வற்றுக்கு, 'லிவோசிட்ரசின் மற்றும் மான்டிலுாகாஸ்ட்' ஆகிய மருந்து கலவைகள் கொண்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அந்த வகையில், பீஹாரை சேர்ந்த, 'டிரைடஸ் ரெமடீஸ்' என்ற நிறுவனம், அந்த மருந்தை, 'அல்மான்ட் கிட்' என்ற பெயரில் வணிகம் செய்து வருகிறது.

இதில், டைஎத்திலீன் கிளைக்கால் எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் கலந்த மருந்தை உட்கொண்டால், உயிருக்கு ஆபத்தை விளைக்கும்.

தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், ஏற்கனவே, 'அல்மான்ட் கிட்' மருந்துக்கு தடை விதித்துள்ளன. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் இந்த மருந்துக்கு தடை விதித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த மருந்தை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மருந்து குறித்து, 94458 65400 என்ற 'வாட்ஸாப்' எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement