தை அமாவாசை: தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில், நாளை தை அமாவாசை என்பதால் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தேவிபட்டினத்திற்கு அதிகளவில் பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் ஆர்.எஸ். மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இல்லாததால் ஆண்டு தோறும் வாடகை வாகனங்களில் தேவிபட்டினத்திற்கு பக்தர்கள் செல்லும் நிலை உள்ளதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

எனவே, பக்தர்களின் நலன் கருதி ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேவிபட்டினம் பகுதிக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement