வேலுார் சி.எம்.சி., டாக்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

வேலுார்: சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, வேலுார் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரியில் பணிபுரியும் டாக்டர் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வேலுாரில், சி.எம்.சி., எனும் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரி செயல்படுகிறது. இதில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்பட்டு உள்ளன.

அங்குள்ள வீடு ஒன்றில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பீஜியன் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில், சென்னையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர், நேற்று திடீர் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்தனர்.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், டாக்டர் பீஜியன் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் சந்தேக நபர்கள் நான்கு பேர், பீஜியின் அறையில் தங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

சோதனையின்போது குடியிருப்பில் இருந்து வெளியே செல்லவும், வெளியில் இருந்து உள்ளே வரவும், யாரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் அதன் நிர்வாக அலுவலங்களிலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதைனை நடத்துவதாக தகவல் வெளியானது.

இது குறித்து, சி.எம்.சி., மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சி.எம்.சி.,யில் அமலாக்கத் துறை இயக்குநரகம் நடவடிக்கை எடுப்பதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருப்பது, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. சி.எம்.சி.,-யில், அமலாக்கத்துறை சோதனையோ அல்லது விசாரணையோ நடக்கவில்லை.

ஒரு பணியாளருக்கு, அவரது தனிப்பட்ட திறனில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் நடக்கும் சோதனைக்கும், சி.எம்.சி., மருத்துவமனைக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement