இளம் இந்தியா மீண்டும் வெற்றி: வங்கதேச அணி ஏமாற்றம்

புலவாயோ: உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் இந்திய அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 18 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஜிம்பாப்வேயின் புலவாயோவில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயது) தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. மழையால் போட்டி தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.


வைபவ் நம்பிக்கை: கேப்டன் ஆயுஷ் மாத்ரே (6), வேதாந்த் (0), விஹான் (7) ஏமாற்ற, இந்திய அணி 9.5 ஓவரில், 53/3 ரன் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி, அபிக்யான் ஜோடி நம்பிக்கை தந்தது. வைபவ், 30 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது வைபவ் (72) அவுட்டானார். கனிஷ்க் (28) ஓரளவு கைகொடுத்தார். அபிக்யான் அரைசதம் அடித்தார். இந்திய அணி 39 ஓவரில், 192/6 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், 49 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அபிக்யான் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 48.4 ஓவரில், 238 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

விஹான் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 17.2 ஓவரில் 90/2 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், வங்கதேச வெற்றிக்கு 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 29 ஓவரில், 165 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. விஹான் 'சுழலில்' கலாம் சித்திகி (15), ஷேக் பர்வேஸ் ஜிபான் (7), ரிஜான் ஹொசைன் (15), சமியுன் பசிர் (2) சிக்கினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் அஜிசுல் ஹக்கிம் (51) அரைசதம் கடந்தார்.

மற்றவர்கள் ஏமாற்ற வங்கதேச அணி 28.3 ஓவரில், 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் விஹான் 4 விக்கெட் சாய்த்தார். முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.


இளம் வீரர்

இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி (72), யூத் உலக கோப்பை (19 வயது) வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 50+ ரன் விளாசிய இளம் வீரர் (14 ஆண்டு, 296 நாள்) என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், 2014ல் துபாயில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஷாஹிதுல்லா கமல் (51 ரன், 15 ஆண்டு, 19 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.

கைகுலுக்க மறுப்பு


'டாஸ்' நிகழ்வின் போது இரு அணி கேப்டன்களான ஆயுஷ் மாத்ரே (இந்தியா), ஜவாத் அப்ரார் (வங்கம்) கைகுலுக்கி கொள்ளவில்லை. சமீபகாலமாக வங்கதேசத்தில், இந்தியருக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால் பிரிமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் ஒப்பந்தமான வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர், கோல்கட்டா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்க வங்கதேச அணியினர் மறுப்பு தெரிவித்தனர்.

Advertisement