கோழிகமுத்தி யானைகள் முகாம் வனச்சரகமாக... புதிய உதயம்! கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாம், வனச்சரகமாக உருவாக்கப்பட்டுள்ளது. வனச்சரகர் பணியிடம் உருவாக்கப்பட்டு, யானைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் கடந்த, 1850-ம் ஆண்டு வனத்துறை உபயோகத்துக்கு யானைப்படை உருவாக்கப்பட்டது.

பின்னர், 1874ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் யானைகளை பிடித்தல் தொடங்கப்பட்டது. கடந்த, 1889ம் ஆண்டு யானைகள் பிடிக்க, குழிகள் வெட்டி யானைகள் பிடிக்கப்பட்டன. மரங்கள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிக்கு அவை பயன்படுத்தப்பட்டன.

கடந்த, 1956ம் ஆண்டு வரகளியாறு யானைகள் முகாம் துவங்கப்பட்டன. கடந்த, 1972ம் ஆண்டு யானைகள் பிடிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 1972 --75-ல் யானை கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறையாக மாற்றப்பட்டது.

கடந்த, 1975ம் ஆண்டில் இருந்து யானைகள் முகாம், பயிற்சி மற்றும் யானை பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.

கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில் மொத்தம், 24 யானைகள் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. யானைகளின் வயது, எடை மற்றும் செயலுக்கு தகுந்தவாறு கால்நடை டாக்டரின் பரிந்துரையின்படி உணவு வழங்கப்படுகிறது.

யானைகளை பிடிக்கும் பணி இந்த யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மேலும், குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிப்பது, அவற்றை லாரியில் ஏற்றுவது குறித்து வந்து அதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வளர்ப்பு யானைகளுக்கு தினமும் அரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.

கோழிகமுத்தி யானைகள் முகாம், சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு சுற்றுலாப்பயணியர், வளர்ப்பு யானைகளை காண அதிகளவு வந்து செல்கின்றனர். இந்த முகாமினை காண வனத்துறை வாகனத்தில் சுற்றுலாப்பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாம் ஐ.எஸ்.ஓ., 9001 சான்றிதழ் கடந்த, 2015ம் ஆண்டு பெற்றுள்ளது.

இவ்வாறு சிறப்பு பெற்ற கோழிகமுத்தி யானைகள் முகாமில் போதிய வசதிகளை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது.

மொத்தம், ஐந்து கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், பார்வையாளர்கள் அரங்கம், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சமையல் கூடம் புதுப்பிக்கப்பட்டு, யானைகள் பெயருடன், அதற்கான உணவு பட்டியலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலாந்தி வனச்சரகத்தில் இருந்த கோழிகமுத்தி யானைகள் முகாம், தனி வனச்சரகமாக பிரிக்கப்பட்டு, புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

யானைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக வனச்சரகம் பிரிக்கப்பட்டதுடன், வனச்சரகராக சுசீந்தரராஜ் என்பவர் நியமித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோழிகமுத்தி மற்றும் வரகளியாறு யானைகள் முகாமினை கண்காணிக்கவும், யானைகள் பராமரிப்பு, பல்வேறு இடங்களில் பிடித்து வரப்படும் யானைகள் கண்காணிப்பு செய்தல், கும்கியாக மாற்றப்படும் யானைகள் குறித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், கோழிகமுத்தி வனச்சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்கள் மட்டும் உள்ளன. இங்குள்ள யானைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பு பணிகளை அதிகாரி மேற்கொள்வார். டாப்சிலிப் வனச்சரகர், சுற்றுலா உள்ளிட்டவை கண்காணிக்கவும் சரகம் பிரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

@block_B@

ஒன்பதாக உயர்வு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளான திண்டுக்கல் டிவிஷனுக்கு உட்பட்ட பழநி, தேனி, கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து, ஒரு சில பகுதிகள், வெளி மண்டலமாக இணைக்கப்பட்டன.புதியதாக மொத்தம், 150 சதுர கி.மீ., (15,048 ெஹக்டேர்) இணைக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம் தற்போது, 958 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தற்போது, இப்பகுதிகளும் இணைக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், 1,109 சதுர கி.மீ., கொண்டதாக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு என, எட்டு வனச்சரகங்கள் இருந்தன. தற்போது, உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப்பில் இருந்து கோழிகமுத்தி யானைகள் முகாம் தனி வனச்சரகமாக பிரிக்கப்பட்டதால் ஒன்பது வனச்சரகமாக எண்ணிக்கை உயர்ந்தது.block_B

Advertisement