தேசத்திற்கு குஜராத் அளித்த பங்களிப்பு; மூன்று ஆளுமைகளை பாராட்டிய சிபிஆர்

9

புதுடில்லி: தேசத்திற்கு குஜராத் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. இந்தியாவிற்கு வழங்கிய மூன்று உயர்ந்த ஆளுமைகளுக்கு நன்றி என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


டில்லியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் உள்ள ஹரிஜன சேவக் சங்கத்திற்கு
துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் விஜயம் செய்தார். அவர் 'மஹாத்மா காந்தியின் பார்வை' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான கருவிகள். அறிவு குணம், மனசாட்சி மற்றும் சமூகப் பொறுப்பை வடிவமைக்கிறது. சமூகத்திற்கு ஹரிஜன சேவக் சங்கம் சிறப்பான சேவையை வழங்கி இருக்கிறது. மேற்கத்திய உடைகளை காந்தி கைவிட்டார்.


இந்த மாற்றம், மக்களுடன் அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதில் காந்திஜியின் வாழ்நாள் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்தியாவின் பருத்தி மான்செஸ்டரில் பதப்படுத்தப்பட்டு இந்தியர்களுக்குத் திரும்ப விற்கப்படுவதை எதிர்த்தார். அதற்குப் பதிலாக அவர் சுதேசியை ஆதரித்தார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின்
கல்வியை ஆதரிப்பதிலும் அவரது பயணத்தை வடிவமைப்பதிலும் ஹரிஜன சேவக் சங்கம் முக்கிய பங்கு வகித்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பல முன்மாதிரியான நபர்களை சங்கம் தொடர்ந்து வளர்க்கும். சமூகத்திற்கு நேர்மையான சேவை செய்வது, பண்பும் மனசாட்சியும் கொண்ட நபர்களை உருவாக்குகிறது. தேசத்திற்கு குஜராத் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, தேசிய ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி என மூன்று ஆளுமைகளை குஜராத் மாநிலம் இந்த நாட்டிற்கு வழங்கியுள்ளது. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Advertisement